Tuesday, May 24, 2016

முகநூல் மலர்ந்த வாசமலர் ஆசுகவி.

முகநூல் மலர்ந்த வாசமலர்.
(ஆசுகவி)

பாயிரம் :
இறையருளும் ஈன்றோர் தவமும் குருவின்
நிறைகருணை என்றவிம் மூன்றும் -- உருக்கொண்டு
உந்த இவைபயத்த யானோ அவர்புயத்த
விந்தை எழுது கலம்.

இளைய புன்கவிதையேலும் :
ஆற்றுநீர் ஊற்றுநீர் வேற்றுநீர் வேலையுள்வான்   
தேற்றியூற்ற கூடிக் குறைதலிலா -- வாற்று  
திருவளர்எம் தேவே! கவிஎனஎம் பாட்டுப்   
பொருளதோ நும்பெருமைப் பாற்று?

வைட்டனவன் :
துளசியும் தாவரை யோடு மகிழம்
விரசி பெருமான்தோள் சூடிக் -- களைந்த
பவித்திர மோடு இலகு இலச்சினை
மேவுவார்தாம் வைட்டனவர் ஆம்!


ஸ்வாசார்ய  பிரதிபத்தி :
அறுகால அம்சிற காள்வரி  வண்டே! 
பெருமான் அவன்பாதம் யாமும் -- பெறவே,
உபதேச நல்வார்த்தை எம்தூதாய் நீர்மொழிய 
சோபனம் ஆமே உயிர்க்கு!!

பெருமாளில் அண்ணர்தான் வெள்ளக் குளத்தே !
பெருமான் அடியாரில் அண்ணர் -- ஒருவர்
உரையில் இராமா னுசன்கோதைக் கண்ணன்!! (அவர்கள்)
உறவில்ஓர் ஆண்டானும் உண்டு!!!

ஷடங்க பக்தி புஷ்பாஞ்சலி. 

கொல்லாமை! உட்புல னோடு வெளிப்புலன் 
நில்லா தரிகெட்டுச் செல்லாமை! -- சொல்லாண்மை!
எல்லா உயிரிடத்தும் பொல்லாமை இல்லாது
நல்கலிவை ஏற்பாம் இறை!


சாத்திரம் ஒன்றால் அறிதல் தக்கானை!
தோத்திரம் கொண்டு உணர்ந்தக்கால் -- நாத்திகன்
ஆத்திகன்ஆம்! ஆத்திகரோ மற்றெல்லாம் நீத்துனை
நித்தம் நினைவான்செய் நேர்ந்து!

ஸ்ரீ கோ க வ அண்ணாவிப்பன் ஸ்வாமி :

ஆனகட்டி போரடித்த நாடிதில் எட்டுதிசை
ஆனையாம்  சீடர் படையொடு -- தானுமோர்
ஆனைபோல்  வாழ்ந்த மணவாள யோகிதன்
தானை வரதகுரு வாழ்த்து!

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்.

மாலை வெயிலில்வான் மஞ்சள் நிறம்காட்ட
ஆலய மின்தீ பம் சூடம் போல் -- தொலைவில்
கீழைநல் கோபுர வாயில் முகம்காட்ட
ஏழையர்க் கீதே பகல்.

திருவஹிந்திரபுரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.

மீள்கை விரும்பா உலகிதில் எம்மைநீர்
ஆள்கை விரும்பி அவதரித்தீர்! -- கொள்கை
குறிப்பு உமக்கதாயின் மாமுனியே! முன்னம்
குறிப்பீர் அடியேனைத் தொண்டு!

பரமபதம் பாற்கடல் என்றிவை தொறும்
இருக்கை படுக்கை எனத்தான் -- இருந்தது
போதா தெனஇளை யாழ்வாராய் முன்விபவம்
அதோடுஅர்ச் சையிலுமாம் தொண்டு.

தொண்டு நிறைகொள மாமுனியாய் ஈண்டவர்
மீண்டு மயர்வற வாய்மொழிக் -- குண்டான
ஈடு பெருக்கலும் மாறன் அடிஎனவே
கூடு பெருமை அமைந்து!

11. இந்திர புரசுந் தரரே! உமதிருப்பால்
அந்த நகர்திரு வைகும்நல் -- இந்திர
புரம்என வாயித்தோ? மாமுனியே! நீடும்
வரம்வாழ்த்த வாய்மால் அடிக்கு!

நாமுமினி நாநிலத்தே நன்குய்ய வந்துதித்த
மாமுனிகள் தொண்டாள் தவமுடையோர் -- தூமனத்தால்
தோத்திரம் செய்தெமை நோக்குவரேல் என்வினைஎம்
மாத்திரம்வை குந்தம்கைப் பட்டு!

வேதாந்த வாசிரியரும், பிள்ளை லோகாசாரியரும்.

உலகா ரியன்வழி என்ன புதிதா?
அலகிலா வேதாந்த வாசிரியர் -- கோலிய
கோட்ப்பாடு என்ன பிணக்கா? இருவர்க்காய்
ஆட்ப்படுதல் அன்றோ இணக்கு?

தேவாதி ராசன் உலகாரி யன்என
மேவி உரைத்த பொருளவை -- யாவும்
முதலாழ்வார் தொடங்கி அரங்கன் அணைவும்
எதிராசர் தாள்துணை என்று !

நாதமுனிகள், காட்டுமன்னார் கோயில்.

மேலான நாலா யிரம்நமக் கீந்த
தூயோனை! தேவகான பண்இசைத்து --மாலோனை
மாயோனை பத்திமையால் காணும் உயர்யோக
நேயோனை வித்தகனை வாழ்த்து!-10

சடகோபன் .

வேதம் தமிழ்செய்த மாறன் மாலவனின் 
பாத  நிழல்என  நம்முடிக்காம் -- போதிற் 
கமலக் குடையாம்! பிறவிப் பிணிதீர்த் 
தமலம் அளிக்குமோர் ஆறு!

முதல்மூவர் நெற்றி,கண், தேர்ந்த அதரமாய் !
மோத மழிசை இதயமாம் ! -- வேதியார்!
பாண்தொண்டர்! கோன்குல சேகரன்! வேல்கலியன்!
பூண்பொறியாம் மாறன் உடற்க்கு!

அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான், தென்னேரி அகரம்.

ஏணி இன்றி கொடிபூ சணியைமுன்  கூரைமேல்
பூணுவார் உண்டோ?இம் மன்னா -- மனிசரை
மாகவை குந்தமேற்றல் ராமா னுசனுக்கு
ஆகலென்னே என்றறிந்தார் உய்ந்து!

எதிராசரும் - கூரேசரும் . 

பின்நுற்றார் மோக்கம் எதிராசா! நின்சரண்
என்றிருப்பார்!, அற்றே முடிகூட -- முன்நுற்றார்
உய்வதூம்! அத்தலைக்கு ஆழ்வான் உறவதாக
ஐயஉண்டோ கூரேசர்க் கொப்பு?

அருளாளனும் , ஆளவந்தாரும் :

வரதநின் கண்வீச்சு ஒன்றே தருமே
இரப்ப! செவிடன் கேட்கும் -- பரந்த
உலகிதில் மூகன் மொழியும் குருடன்
துலங்கக்காண் சேயாம் மலடு.

21. பர வாசுதேவன் :

நாகணை மீமிசை நம்பிரான் தேவிமார்
பாகத்தணை மூவர்தம் கூட்டனாய்   -- ஆகித்தன்
தூங்குகால் நான்றி திகிரியும் சங்கமுடை
நங்கள்மால் ஆளும் உலகு!

கோதா ஸ்துதி :

முலையூண் போதுதைத்தல் மற்று கடிதல்
இவைசெய் குழவியைத் தாய்தடிதல் -- இல்லை!
அனையசெய் என்னையும் கோதா! நீயும்
தொலைதல் செயலலையே காத்து!!

தேவப்பெருமாள், காஞ்சி. 

யானே சமாதிகர் இல்லா இறைப்பொருள்!
யானே எமைஅடைய ஆறுமன்றி -- யானே
அடையும் பயன்நுமக்கு என்றயிவன் தாளே
அடைவதன்றி உண்டோ அயல் ?

கச்சியில் கண்கொடுக்கும் தெய்வம்! இளையாழ்வார் 
நிச்சலும் நோற்றுகந்த மெய்யன்! அங் -- குச்சிமேல் 
வழுவாது ஆலவட்ட நம்பி அளவளாவும் 
வேழமலைத் தெய்வம் வணங்கு!

கருளக் கொடியோன்! கருணை விழியோன்! 
அருள்கை பொருட்டாய் கருடன் --சிரமேல் 
வருகை தருவான்! அருள்மழை ஏற்று 
இருகை உயர்த்தீர் இனிது!

பெருந்தேவித்தாயார், காஞ்சி.

பேரரு ளாளன் பெருமைக்குத் தக்கநம்
பெருந்தேவித் தாயே! அறியாச் -- சிரியேனை
தேவாதி ராஜரவர் ஏலாமே தள்ளாது
ஆவா எனஇரங்க லாற்று!

அஷ்ட  லக்ஷ்மி :


எட்டிலே ஒன்றதூம் ஓதிட, எட்டொடு 
எட்டு அறுபத்து நாலுமே -- கொட்டிக் 
கொடுக்கும் அருளன்னை! அன்னாள் திருப்பாதம் 
வீடும் கொடுக்கும் விரும்பு!

பாஹு சாயாப்யாம்.

ஒருகுடைக் கீழ்தாயா ரோடிருந்தாய்! குன்று
பெரும்குடையாய்த் தாங்கி இடையர் -- திரள்காத்தாய்!
நாரா அயன எனும்பெயரில் யானும்தான்

சேரேனோ? கட்டுரைஎங் கோ!


கிருஹா அர்ச்சை 

எண்ணில் வரும்!ஏழை ஏனும் அவர் இல்லம்
தன்னில் வரும்திண்ணம் நம்கண்ணன்! -- உண்மையில்
அன்னவர் பண்ணும் பகட்டுக் கலாதவர்
அன்பும் எளிவும் பொருட்டு.

மாவிளக்கு மகிமை. 

திருமலை அப்பன் திருமகள் சேர
அருள்கை பொருளாய் வரும்நாள் -- திருநாள்
புரட்டாசி மாதத்து மாவிளக்கு நன்நாளால்
பாராட்டி பத்திமையோ டேற்று!--20

31. விருந்தும், மருந்தும் :


விருந்தும் மருந்தும் விழைவார்க்கு மாலே!
பொருந்தார் வினைவாய்ப் பிணியாய்! -- திருந்தி 
வருவார்க்கு தீதொடு எதமேதும் சாரா!
ஒருநல்ல சுற்றமவன் ஏற்று!

 '' தவம் மே - ஹம் மே குதஸ்தே '' ?

''எனக்கு நீ தொல்லடிமை'' என்றலுமே அன்று
''எனக்குயான்'' என்பேன் ! உளவோ -- எனக்குபோல்
சாட்சியம் மற்று உனக்கு? பழுதேயோ
ஆட்சியி லாம்தொடர்சிக் காய்.

செய்தபல சாத்திர நூலும்? அவதாரம்
பொய்த்யேவோ? பொய்யாப் புலவர் நல் -- வாய்மொழியும்
கைம்மையோ? நீராட நின்றஇக் கோலம்தான் 
அம்மவேதும் சிந்தை மருளோ? 
ஒருகுறளாய் ஈரடிமண் வாமனனாய்ச் சென்று
தருகவென தாழ்த்தக் காலம் -- திருமார்பில்
தேவியை உத்தரியம் கொண்டு மறைத்தாய்!எம்
தீவினை தீரஅவள் காட்டு.!

முதலாழ்வார்கள்

தரிசன தத்வங்கள் மூன்றாய் திருமால்
கரிசன தோத்திரப் பாடல் -- எரிதிரி
கொண்டு விளக்கதும் ஏற்றிய மூவரவர்
தொண்டு முதல்தனி வித்து!

பொய்கையாழ்வார், திருவெஃகா 

வடமொழி வேதம் விளம்புமவை நெய்யா
திடமுடை நற்றமிழ் தன்நா -- இடுதிரியா
ஆரண நல்விளக்கு நன்னாக ஏற்றினான்
நாரணர்க்குச் செய்யிருள் பொய்த்து!

பூதத்தாழ்வார், திருகடல் மல்லை.

கனைகடல் ஒதமும், காற்றும், கதிரும்
வனப்புடை சிற்பம்கொள் மல்லைப்   -- புனைக்குடைக் 
கோயிலும் கொண்ட தலசயனத் தெம்இறையை 
வாயில்வை பூதத்தார் போற்று.

தமிழ்த் தலைவன், திருமயிலை.

முதலாழ்வார் மூவரும் கோவல் இடைகழி
போத புகுந்து நெருக்குவனாம் --மாதவன் !
பெய்மழை கும்மிருட்டில் பாவிளக்கு ஏற்றலும்,மால்
ஐயன்தமைக் காணக் கொடும்!

மாமயிலை வந்து பிறந்து மாதவனை 
தூமொழி கொண்டு துதிக்க -- தாமே 
அறிந்து அதிசயித்தார் நாரணனை! அன்றி
நெறிசெய்தார் மாமழிசை யார்!

 பிறந்ததன் ஊர்பிறந்த தன்னுடை வாவி
சிறந்ததாம் நீர்கொணர்ந்து நம்மின் -- அருந்தவத்த
தீர்த்தன் தமிழ்த்தலைவன் நீராட்டம் கொள்பயன்
தாழ்த்த நமைபுனித மாட்டு!

41. திருக்கண்டேன் என்று திருமாலை நேரில் 
உருக்கண்டு கொண்ட  தமிழ்த்தலைவன் --- கூறு 
பனுவல் வழிமண வாளயோகி தாளே 
தினமும் நினைவார் பழகு!

பெரியாழ்வார்.

தன்னைத் ஒருத்துத் தவிர்ந்து,அத் தாமரையாள்
அன்பன் ஒருவனுக்கே முப்போதும் -- இன்பா
மொழிவரே பல்லாண்டு ! அப்பெரி யாழ்வார்
வழிவகையே எம்மனோர்க்கும் சால்பு!--30

கருட பஞ்சமி :

புள்ளரசே! பாம்பரசன் பள்ளிகொள் பூமிநாதன்
கொள்ளரசே ! கடுவிசைத்தோள் கோமானே ! -- கள்ளமில்லா
பக்தருக்கு பிள்ளைநற் பேறுநீடும் வள்ளலுனை
இக்காலம் வாழ்த்தல்என் வாழ்வு!

திருப்பாணாழ்வார், உறையூர்.

கார்த்திகையில் நல்ல உரோகிணிநாள் தோன்றியே
பார்புகழ் பண்சேர்த் தமலனாதி -- தேர்ந்திசைத்த
வள்ளலே! தென்னரங்கர் பூண்மார்பில் கௌதுபமே!
வெள்குவேன் என்மைநின் கூட்டு!

அரங்கன் பாதாதி கேசம் போற்றி
வரங்கள் ஏதும்தான் வேண்டாத -- திறன்நம்
அரங்கனும் மெச்சி திருவடி நீழல்
த௫ம்பாண் பெருமாள் பணிந்து!

கமலவல்லித் தாயார், உறையூர். 

வாய்மை இலேன்!வரியார்க்கு  ஈந்தேனாம் வண்மையும்
தூய்மைத் துளியுமிலேன்! கீழான -- நாயினும்
நீசனேன் நின்னடைந்தேன் கமலை எனும்தாயே !
யோசனை விடுத்தெமைகை தூக்கு!

பெரிய பிராட்டி, ஸ்ரீரங்க நாச்சியார். 

தன்னைத் தொழுவார்க்கு தன்அருள் தன்னாலே
முன்னை ப் பழவினை ப் பாற்றியவர் -- உன்னிற்
றெலாம்தருவாள்! வாநாடும் மேலீந்து மற்றை
கோலிற் றலாஎன் வருந்து !

தாயே! உனைக்காணல் என்னே எனதவிப்ப
நீயேவந் தென்கண்முன் நின்றாய்!உன் -- சேய்நான்
எனவறிந்தும் நாயேன் தொழத்தடை உண்டோ?
மனமுவந்து வேட்டுமிதைக் கூட்டு!

தானே தனதாள் முதல்நல்கி தன்கொழுனன்
வானே அருள இசைவித்து -- யானோ
இவற்கு எதுசெய்தோம் என்றெண்ணும் அன்னை
அவட்காகும்  மாலே இணை !

நமக்குடைப் பெருமாள், நம்பெருமாள்.

கரம்சிரம் நம்அரங்கன் ஆளவே!   ஆகில்
வரம்தரும் என்றுநீர் நாடுமோ?-- கூறில்
மற்றுளார் தெய்வம் கிடக்க திறம்பாமை
பெற்றுளார் உய்வகை ஓம்பு!

51. செயலில் செலக்காணா தென்னரங்கன் கோயில்
அயலில் அடியேன் மனமாழ் -- பயனாய்
வரக்கண்டேன்! நாளும் மகிழ்வெய்து வேனாய்த்
திருக்கொண்ட தெய்வத் தரசு!

இருவராய் வந்தார்!என் முன்னேகாண் கின்றார்!
உருகலா கல்மனதை தம்மின் -- அருளெனும்
கார்கொடு நீராய்க் கரைத்திட்டார்! யாரெனை
நேர்கொடு நேர்செய்வர் மற்று?

அருள்கண்ணும் ஆங்கே தருகையைக் காட்டும்
பெருமானே! ஏனோ திருவடியை -- தாரா
தொளித்தாய்சொல்! தக்கார் அவர்க்கே உரித்தோ?
எளியேற்கும் நீடும் இறை!

பங்குனி உத்திர நன்நாள்:

திருவே துணையாய் திருமால் சரணம்!
திரு நாடு தன்னில் இருவர் -- பொருட்டான
தொண்டாள் சிறப்பு நமக்காய் உதகிட 
உண்டான பல்குனிநாள் போற்று!

காவிரிதான் அந்த விரஜையோ? மேன்வைகு 
கோவில் அரங்கம் பரம்பதமோ? -- தேவன் 
பரவாசு தேவன்தான் நம்அரங்கன் ஆமால் 
பரமபதம் இங்கலால் எங்கு?


மேல்நாடு நீங்கி அரங்கம்சேர் ஆசையால்
கீழ்நாடு காணதிற ளுங்காலை -- வாழ்வீட்ட
வந்த தமருகந்த மேனி எதிராசா!...
இந்தமுனி கோட்டியால் வீறு!

ஆழ்வார் திருவடி தொழல் :

கடலெழுந்த மேகம் மழைஎன மீள 
கடல்சேர்ப் பதுபோல்  இணைத்தாள் -- வடிவாம் 
சடகோபர் வாய்த்த திருத்தாள் தொழுநாள்
அடியார் விதையும்விண் மீது !.

தீர்த்த பேரர், திருவரங்கம்.

மஞ்சன மாட்டுநல் மேனிப் பிரானே!நின்
அஞ்சன நெற்றித் திலகமும் -- கொஞ்சிளம்
புன்நகையும் சக்கரம் தண்டு கதையுமே
என்நெஞ் சகலா வடிவு.--40

ஆழ்வானும், அரங்கனும்.

வெள்ளை உடுத்தய்யன்  எல்லில் பிழைப்பத்தான்
கள்ளமே  காஷாய மேவினான்,அவ் -- வொள்ளிய
ஆழ்வானைப்  போலே  அரங்கன் உலாயிருப்பச்
சுழ்கலாப காலச்செல் வன்.

 யாதவ சிம்மமும் நரசிம்மனும். 

பக்தன் அழைப்ப  பிளந்தபாரை போந்தவன்
பார்த்தன் பிழைத்தனாய் தேரைநன் -- கூர்ந்தவன்
என்றிவர் தாம்அல்லிக் கேணிக்கு நின்றவர்
நிற்றதூம் ஓயா துளத்து.

61. தெள்ளிய சிங்கப் பெருமாள், திருவல்லிக்கேணி. 

அழகே ! அழகின் முதிர்தீஞ் சுவையே!
எழுமைநோய் தீர்க்கும் மருந்தே! -- எழிலே!
பழக வினிய பொருளே! நரசிங்கா!
ஏழையேன் ஈட்ட,என்   கூட்டு!

ஒன்பதோடு ஒன்றும் கடந்தஅம் மூன்றுநாள் 
அன்பரவர் கண்டுகந்த தால்களைப்போ? -- அன்றலலால் 
நின்னை விடாயாற்றல் என்பொருட்டாம் ஈதுஅன்பர் 
நின்னை இயற்றுமா றற்றோ ?

அந்தியில் தோன்றி அடாது தன்னையும் 
நிந்த்தித்துத் தன்மகன் சின்னவன் -- என்னாது 
உன்னி இடர்த்தானை பொன்னன் அவன்பொன்றக் 
கொன்றானை ஆளரியைப் போற்று!


சிங்க முகம்! தங்க உடல்!அன்பு
பொங்கும் பதுமவிழி! பூவைத்தார் -- தாங்கும்
பொலிவென சங்கும் திகிரி! இவையுடை ...
மாலை! மறவேன் இறை!

ஆனிக்கருடன், திருவல்லிக்கேணி :

தூணில் பிறந்து இரணியன் ஆகம் 
துணித்தான் இருகூறா அன்று! -- இணைக்கபாடம் 
வாங்க வினதை சிறுவன்தன் தோள்மேலார் 
நீங்கலார் நம்மனத் தின்று !


ஸ்ரீ பார்த்தசாரதி, திருவல்லிக்கேணி.

நிமிர்ந்து பரந்த திருத்தோளும்! தேர்மேல்
அமர்ந்து பரியை உழற்றக் -- கமைந்தகைக்
கோலும்! திருத்தாளும்! அஞ்சலென்ன கைஇவை
நாலும்ஆம் தஞ்சம் நமக்கு!

குங்குமம் அப்பி குளிர்சாந்தம் அட்டித்து
மங்கல நூல்ஓத தேவியுடன் --பாங்கான
வீதிவழி பவனிதான் என்னோமால் நம்மின்
எதிர்விழி கோடல் பொருட்டு ?.

சிசுபாலன் தேசழிய தேர்கடாவி தேவி
இசைய வதுவைநாள் வந்தார் -- திசைப்ப
உருப்பிணியை தன்தேசம் கொண்டொய்து செய்கை
திருத்தி மணம்புணர்ந்தான் மால்!

செண்பகம் மல்லிகை யோடுமடல் செங்கழுநீர் 
தண்முகத்  தல்லியும் பூங்குழலார் -- பெண்முகம் 
காட்ட தரணியாளன் பார்த்தன்தன் தேர்முன்னோன் 
காட்டுமழ கொக்குமவர் ? அன்று!

பகல் பத்து வேணுகோபாலன் சாத்துப்படி : 

கொண்டை அழகுடன் மாதுளை நல்விறலில் 
கொண்ட குழலும்கால் தண்டையில் -- மண்டிய
மாடும் நம்மனதை விட்டகலா ஈடும்
எடுப்பும் நினைதொரும்தித் திப்பு!

71. மாசிமக கருட சேவை : 

வங்கமா தண்புனல் வாருணி தாள்வருட
அங்கை சிறகாள் பறவைதான் -- தாங்கி
வருவான் ஒருவல்லித் தாமரை யாள்சேர்
திருமார்வன் மாசிமகத் தன்று!

சேஷவாகனம் :

பரம்பரன்! பார்த்தன் பராத்பரன்! சேஷன்
புரத்த பரமபத நாதன்! -- சிறந்தநல்
தேவிமார் சேர்ந்திருபால் மேவி அருள்மாலை
நாவில் இறையேனும் கூவு!

இராமர்.

சொல்லில் சுருக்காய் சுருதிப் பொருளென
எல்லா வரமும் தரும்சுர பி -- அல்லவே?
ராம! நின் நாமம் நயம்பட நானுரைக்கில்
ஆமே சுதைத்தேன் எனக்கு!

கீதாசாரியனும், ஜகதாசாரியனும். 

தேர்ப் பாகனார் உகந்த வாதப்போர் பாகனார் -
சேர்த்திசைந்த நம்மின் வினைக்கோர்
ஆர்ப்பழி - தீயில்பொறி சக்கரக் கையினார்.
வேர்ப்பற்றாய் தாட்பற்ற நமக்கோர் வாள்முதலே!

மால்தானே தானுமாய்  தன்னால் இவனுமாவான்
போலாய் இருவர் எனவானான்! -- ஞான
வலையத்து தன்ஓத்து தான்விரிப்ப கூறு
கலைக்கெல்லாம் கோயில் அவன் .

ஆண்டாளும் வரதனும். 

அரங்கன் உகந்தாளை வண்கையார் கச்சி
வரதன் உகக்கும்! இருவர்க்கும் -- சேர
எதிராசர் தாமுகப்பாம் ! என்றால் சிபாரிசு
எதிராசர் தாமன்றி யார்?--50.

வரத! உனக்கிது என்தகுமோ? முன்கை
வரம்தர வைத்துபின் கைமேல் -- எரிகனல்
சக்கரம் ஏதுக்கோ? அஞ்சுவேன்நும் பால்அணைய
அக்கை மறைத்தருள்கை தா!

கரிவரத! கச்சிக் கரிகிரி உச்சி வரத!
புரமெரிசெய் பொன்னன் அரனும் -- சிரம்திசைக்
கோர்நான்கும்  தாங்கு மயனும் ஏற்றநின்ற
தோர்பாங்கும்  யான்னுரைக்க ஏச்சு!

வரதனும் பெரும்தேவியும் .

ஆயியும் அப்பனும் அம்ம எமக்கருள,
தாயினும் சாலப் பரிந்துதம்--கோயில்
அகன்று இருவராய் வந்தார்! இதயம்
புகுதப்போந்தார்! உய்யாலை ஆட்டு!

ஸ்ரீ பெரருளாளனுடன் திருக்கச்சிநம்பிகள்.

வாஞ்சை யுடனேநம்   கச்சிக்கு வாய்த்தானும் 
தீஞ்சொல்  நாலிரண்டு பேசுமொழி -- விஞ்ச 
உரைத்தவர் வாய்இளையாழ் வார்குறை தீர்த்தான் 
நிறைஞான  தேவகுரு வாழ்த்து!

81. கச்சியில் கண்கொடுக்கும் தெய்வம்! இளையாழ்வார் 
நிச்சலும் நோற்றுகந்த மெய்யன்!அங்  -- குச்சிமேல் 
வழுவாது ஆலவட்ட நம்பி  அளவளாவும் 
வேழமலைத் தெய்வம் வணங்கு!

மன்னார்குடி வித்யா ராஜகோபாலன் :

தோள்கொண்டு நின்கை சுமக்கவா? இல்லையுன்
தாள்தழுவு கன்றென நிற்கவா? -- நாள்பல
இதுபோலா ஆவல் மிகஉடையேன் என்னை (உன்)
பதுமக்கைக் கோலென ஆக்கு! 

திருநாரணன் வைரமுடி :

புட்கொடி ஒன்றுடைய கோமான்தன் பொன்முடி 
தட்டொளி போலமின்ன கண்முகப்பே -- சட்டென 
காண எழிலாய் கலுழன்மேல் வந்தார் !
துணைவியார் சூழ விருந்து!!

உலகளந்தப் பெருமாள் காஞ்சி. 

மாவலியை ஓர்காலால் கீழுலகுக் கோட்டிமறு
தாவில் உலகம்மேல் ஏழவையும் -- மேவிக்கை
இரண்டும் திசைஎட்டும் தட்டதிரு வோணத்தான்
பாரில் பதித்தநாளைப் போற்று.

பவழ வண்ணர், விஷ்ணு காஞ்சி. 

பவழம் பழிப்பத் திகழும் வண்ணர் !
புகழல் பழித்தல் போற்றல் -- இகழல்
இவைகலவா எம்மால் இனிதுறை கோயில்
சுவைத்தகலா கச்சியுள் காண்டு!

யதோக்தகாரிப் பெருமாள், காஞ்சி.

தன்னைப்போல் தன்னின் தமரைதம் நெஞ்சத்து
உன்னி உவந்திருப்பார் யார்,அவர் -- சொன்னசொல்
வண்ணம் நடந்தமால் எண்ணம் பிழையாமே
மண்ணில் மதிப்ப நட.

விளக்கொளி எம்பெருமான், திருத்தண்கா (காஞ்சி). 

விளக்கொளியை! பொன்வேய் மரதகத்தை! துப்பார்
துளக்கமில் ஆரமுதை! நாயேன் -- உளத்துறை
தண்காவில் ஒண்மாலை! தண்மதியை! தாரகையை!
எண்குற்றார் இல்லை இடர்.

திருவேளுக்கை, காஞ்சி. 

வேளுக்கை ஆளரியை நாளும் தொழுதெழ
தோளுக்கும், தோளின்மேல் தோன்றும் -- அணங்குக்கும்
தாளுக்கும் தன்நேர் இலாமுடிக்கும் ஆளும்
துளசிபோல் ஆகதோஎன் நெஞ்சு!

வேளுக்கை நாயகி :

கோளரி மாதவன் ஆகத் தினாள் ! அவள்
தாளறி கிற்கிலார் செய்தவம் -- வாளலவே?
பொன்னன் அகல்மார் பளைந்தவன் போற்றல்முன்
அன்னை அவள்தாள் அடை!

அமிர்தவல்லித் தாயார், திருவேளுக்கை. 

பாலாய்! அமுதாய்! அமுதத் தெழுசாரு
போலாம் அழகன் திருமார் பின் -- பாலே
உனதிடம் தேவி! அமிர்தவல்லித் தாயே!
மனத்திடம் மேவி அருள்!

ஸ்ரீ பச்சைவண்ணர், விஷ்ணு காஞ்சி.

91. நச்சுவார் எச்சப் படாப்பொருளே! நின்வண்ணம்
பச்சைப் பசும்பொன்னோ? காரேய்ப்ப -- மெச்சப்
படும்மிக மையோதான்? இச்சையாய்க் கேட்க்கின்றேன்
விடுஎன்முன் தோன்றி விடை!--60.

ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள், கூரம். 

கேசவா! நின்புகழ் என்வா யதோ?சொல்
நேசனே ! வாசவார் பூங்குழலி -- ஈசனும்
நாள்மலர் மேல்அயனும் கூசம்செய் யாதேநின்
தாள்மலர் தாழ்த்தல் இயைந்து!

திருப்புட்குழி வீரராகவன் நாச்சியார் கோலம்.

தன்னால் ஆகது ஏதிலையாய் முன்னொருநாள்
தன்பொருட்டு இன்னுயிரை தந்தனனே -- என்றுநீ
புள்ளுக்குத் தாய்போல் இரங்கினை ஏற்பதால்
கொள்ளை அழகவள்போல் அன்று!

அக்காரக்கனி, சோளிங்கர்.

கனியை! கண்ணமுதை! கண்டு தொழுவார்க்
கினியை! தீங்கருப்பஞ் சாற்றின் -- தனிச்சுவையை
மெச்சவரும் இன்பவென் பாட்டின்பால் நின்றனக்கும்
இச்சையா மாகில்என் பேச்சு?

என்னைப் பெற்ற தாயார், திருநின்றவூர்.

பிறந்ததால் புண்ணியம் ஏது மிலேன்யான்!
சிறந்தஉன் நோக்குண்டேல் உய்யப் -- பெறுவேனாய்
சன்மம் கடைக்கொளுவேன்! தாயே! அருளுமம்மா!
உன்போல் உதவுவார் உண்டோ?

ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாதான், திருத்தெற்றி அம்பலம். 

முக்கண் முனிமூர்த்தி கோபம் கெடுத்தானூர்!
கட்கம் கிளரி அருச்சுனர் -- மிக்கதாக
விம்மல் தணித்தசெங் கண்மால் திருத்தெற்றி
அம்பலத் தாள்இறையே வாழ்த்து!.

திருவெள்ளரைச்  செங்கண்மால் :

தெள்ளியார் கைதொழும் தேவனார் தென்திரு 
வெள்ளரை பத்துமெட்டும் நாலுமைந்தும் -- மெள்ளக் 
கடந்துசெந் தாமரைக் கண்ணன் கழலே 
அடைவார் அடைவதூம் வீடு..

திருக்கோளூரின் வைத்தமாநிதிப் பெருமான். 

முன்பிறப்பால் மூள்வினை வைத்த முளைநெல்போல்
என்பிறப்பு ஆற்ற முதலாமோ ? -- மன்பிறப்பு
மாற்றல் மதியுடையீர் சேரும்  திருக்கோளூர்
ஏற்ற முடைத்ததோர் வைப்பு!
  
திருக்கூடல் வையம்காத்த எம்பெருமான். 

வையம் முழுதும் வயிற்றடக்கி முன்காத்து
பையஅவை உய்ய வெளிப்படுத்தாய் -- ஐய!தேவர்
பலர்கூடி ஏத்துயர் நாயக!என் ஊழை
உலப்பி உனதடிக்காய்க் கூட்டு!

ஸ்ரீ சத்யமூர்த்திப் பெருமாள் திருமெய்யம். 

மெய்ய மலையை! சொல்செய்கை பொய்கலா
ஐயனை! தூய்நெறிக்கண் எய்துவார் -- செய்தவத்த
தோர்பயனை! தக்கார் தெளியத் திகழ்ஞானத்
ஊர்உம்பனை! நம்பல் நலம்.

101. மையோ? மழைமுகிலோ? மாய மயக்கோகொல் ?
பைநாகத் துப்பள்ளி கொண்டவெம் -- ஐயவோ!என் 
ஐயப்படா நின்ற உலகோர்கள் மெய்யுணர் 
செய்கோல மெய்யத் திறை!.

சார்ங்கவில் சேவகன், கும்பகோணம். 

உய்யக்கொள் மாய மயக்குகள் கற்றதெற்றோ?
மைய்யல்வாய் நோயதாய் ஐய!நின் -- செய்யகோலம்
என்னேஎம் ஆவி புகுந்தழிக் கின்றது
சொன்னால் பசியன்காண் சோறு!

திருக்குடந்தை ஆராவமுதன் :

புவியெட்டும் போற்றும் தெவிட்டாத தேனமுது!
மேவித் தொழும்பக்தர் முன்வினை -- யாவும்
கழல்மருந்து! பாம்பணைமேல் ஆழ்வார் மொழிய
எழலுற்று சேர்ந்த வரசு!

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள். 

தனக்கெதிர் தானேயாம்! மற்றெவர்? என்று
தனக்கிழத்தி சென்று தவம்செய் -- தனித்தலம்
தங்கும்திரு நின்றவிடம் நாரணனும் அங்குசென்று
மங்கலமாய் ஆற்றும் மணம்!--70.

அண்ணன் பெருமாள், திருவெள்ளக்குளம்.

வேட்டகம் நம்மின் கலியனுக்கு! நாட்டமும்
தேட்டமும் அத்தால் குமுதவல்லி -- மாட்டாய்,நம்
அண்ணன் பெருமாள் அவரடியார் ஆதரித்து
எண்ணம் சிறந்தார் இணந்து.

நாகை அழகியார்.

மனமெனும் ஊஞ்சற்கண் மாசில வாகின்
தினமதில் தெய்வம் குடிபுகு -- வானென
தூய்மைசேர் ஞானத் துறைபடிந் தாடிநல்
வாய்மையோ டாகல் கடன் !

அழகா! அமுதா! செலுவத் திருவாழ்
எழிலா! பழவேழ் மொழியுள் -- செழுமென்
தமிழால் தினம்யான் மொழிய வருவாய்
குழகா! பொருள்சீர் பொதிந்து!

ஆதிநாதன், திருக்குருகை 

ஆதிநாதன் பாதம் அனுதினம் பணிந்துநாம்
வேதகீத நல்வாய் மொழி ப் புலவன் -- நீதியோதி
நின்றோம்! நலமந்தம் இல்லதோர் வான்நாடு
நன்று நமக்கன்றி யார்க்கு?

திருக்குளந்தை மாயக் கூத்தன், நவ திருப்பதி.

கிடந்தெழா இக்கிடக்கை என்னோ குடந்தை
இடமா உடைமாயா? எம்போல் -- திடமா
செயல்படாத் தாழ்த்த திகைப்பா? அடிபால்
முயல்கை விடுமேல்யார் காப்பு?

திருக்குடந்தை ஸ்ரீ ஆதி வராஹர் சேஷ வாஹனம்.

தரணியாம் மங்கை தன்தொடைமேல் தாங்கி  
அரவணைப்  பாம்பு அவரிருவர் -- சேர 
மடிமேல் அணைய அடியான் எமக்காய் 
தேடுமால் வீதிவாய் நின்று.

111. திருக் குறுங்குடி வைஷ்ணவ நம்பி.

நம்பி சரண்நமக்கே நாளும் நலமாதல்
நம்பி சரண்எனுமே! வைட்ணவ -- நம்பி
குறுங்குடிக்காய் கூம்புககை! ஏற்றுகவாய்! தாழ்த்த
சிரம்,அடுத் தாம்பிறவி மாய்த்து!

மெய்யூர் சுந்தரராஜப் பெருமாள். 

உய்யும் உபாயம் உனையன்றி வேறெவர்?
ஐயநின் பாதம் சரணாய்,இவ் -- வையம்
புகலெனக் கொள்ள விரைந்தாய்கொல் மெய்யூர் !
இகலொழித் ஆளால் பொருட்டு!

வரதராஜப் பெருமாள், ஆத்தூர். 

காத்தல் அளித்தல் இவையுடை எம்வரத!
காத்தல் முறையுடை மு ப் படை -- யாத்த
கரம்மூன்றும் நும்மடியார் கேட்டு அளிக்கும்
கரம்ஒன்றும் என்ன கணக்கு? 

கிருஷ்ணன் கோயில், மல்லேஸ்வரம்.

பின்னைக்காய் முன்னேழ் எறுது அடர்த்தான்தான்
என்னைஇக் கோலம் செயப்புகுந்தான்!-- பின்னைத்
தரு-விருந்து ஊது குழல்வாய் மடுத்தாவி 
ஈரும்வகை யாக இசைத்து.

115. அகரம் (தென்னேரி) திருப்பதி. 

பொன்ஏர் பலவெழுதி இப்பொலன் நல்கொழிக்க
முன்ஏர் உழஉழுது பொன்குவிக்கும் -- தென்னேரித்
தண்பதிக்காய் நின்றானை! தாமரையாள் மார்வனை!
எண்குற்றார்க் கில்லை இடர்.--80

இல்லை இடர்தான் நமக்கு! இலக்குமி
 மல்கி அமர்கோயில்! மன்றதில் -- முல்லை
இருவாட்சி பூமணக்கும் தென்னேரி நின்று
அருளாட்சி செய்மால் அணைந்து.

அணைவாம் அயன்அரன் வான்அம ரர்க்கும்!
துணைதான் திருமால் எவர்க்கும்! -- அணைந்தன்று
 ஆனைக் கருள்மால் அணையுமித் தென்னேரி
வானமரும் முந்தையர் வீடு

வீடு உகந்தருள்மால் விண்ணோர் அவர்தலை!
நாடி மறைநான்கும் தேடி -- முடிக்கலா
தெய்வம் உறைவதூம்தென் ஏரி அகரத்துள்!
செய்குவான்  உய்வதாய் மெய்த்து!

 உய்யுமாறு மெய்யில் உணரும் ஒருவனை!
 பொய்யர்க்குப் பொய்யனாய்  அற்றதற்றி -- மெய்யர்க்கு
மெய்யனாய் முந்துவான்! தென்னேரி நின்றருள்
பைந்துழாய் பாதத்தான் பற்று!

பற்று எவர்க்குமாய்  முற்றும்  முதல்வனை!
பெற்று அகலுமோ? உற்றதாக் -- கற்றுளார்
 நற்றமெய்தி ஆற்றலும் தென்னேரி ஒன்றதுள்
நிற்றமால் நெஞ்சுளே நோற்று!

நோற்று நடமினோ மாலொருவன் பொன்னடிக்காய்!
ஏற்ற மதுவே நமனோர்க்கு! -- போற்றிப்
புகலும் புனிதனை! தென்னேரி யுள்போந்
தகலும் இனிஓர்  பிறப்பு!

 பிறவி முடித்து தொடரும் அடிக்காய் !
முறைமை அவன்பால் ஒழுகல் -- அறிவு!
எழிலார் திருமாலை தென்னேரி சேரத்
 தொழுவார் விழைவரோ வீடு?

வீடுமின் காயம் வினைவாய் முடித்து!
வீடுசெய் மாயன் மருவிஅணை -- வீடது
நாடலே நல்லறம்! தென்னேரி ஒன்றதுள்
தேடியாள் தெய்வத் தரசு!

அரசும் அமரர்தம் வாழ்வும் இசைய
விரசுவான் போகம்யான் வேண்டேன்! -- அரிசினத்தன்
ஆய்நீ  அகற்றிடினும் மீளேன் அடிக்கலால் !
தீயில் புடம்போட்ட பொன்!

முன்னை உபகரித்த கண்கால் செவியொடு
என்னின் உடல்மேவு ஆக்கையிது -- தன்னையான்
தன்பயன் போக்கி நின்னை மறப்பதூம்
என்வினை யானே பொறுப்பு!

செடியாய வல்வினை தீர்திரு மாலை!
அடியேன் அகரத்துள் காண்டலும் -- தேடித்
திருவா திரைநாள் அமைவதே! அம்மால்
மறவா திருந்த பயன்.

126. இளங்கோயில் கைவிடேல்.
அழையா நுழைந்தாய் அடியேன் மனத்தகத்தே!
ஆழியம் கையாய்! என்னே--எழிலார்
கலுழன்மேல் இங்குற்றாய்? நீநிற்ற ஏழுமலை
போலா இளம்கோயில் நீத்து!

--(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீ நிவாஸ தாஸன்.

கோகுலாஷ்டமி கிருஷ்ணர் வேஷம் :

அனுகரித்து ஆற்றாமை தாழ்ப்ப தரிக்கை
மனமொழி காயம் தலைவன் -- எனவாய்
அவன்தன் நடையுடை பாவனை ஏற்று
உவத்தல் பதின்மர் மாட்டு!

நாச்சியார் கோயில் கல்கருடன் :

 நல்லாருக்கும் பொல்லார்க்கும் நானுளேன் என்றுகாட்ட
எல்லார்க் குமாய்ஏந்தி வீதிவழி -- கல்கருடன்தான் 
காட்சி தரும்நாச்சி யார்கோயில் புள்ளரையன் !
சாட்சி விரும்பும் பிரிது?

ஸ்ரீ ஜெயந்தி வெண்ணைக்காடும் பிள்ளை :

வெண்ணை எனஎன் உயிரை விரும்பிஎன்

கண்ணின் வழியான் அறியாதே -- திண்ணிய 
நெஞ்சினூடே வந்து எனதிது என்பனால்
விஞ்சுமவன் கள்ளம் பெரிது. 

கடிகை தடங்குன்றின் அக்காரக்கனி :

அரன்அயன் போற்றும் நரன்கலந்த சிங்க
உருவதாய்! பாலன் பிரகலாதான் -- கூற்றில்
வரம்தர நின்ற வகையே அடியேன்
நிறம்பெற வந்தரு ளே !

131. புல்லாணி தர்பஸயனப் பெருமாள் :

அபயம் பிறர்க்காவார் தம்மின் உபாயம்
இவர்க்கு கடலரசன் ஆகல் -- தவறுஎன
வாளா இருப்பகடல் வற்றக் கிளர்த்தவன்
தாளால் பிறவிகடல் துற்று !

குருவாயூர்க் கண்ணன் :

மீனாமை ஏனம் எனபத்தும் தோற்றுமால்
தானாய் தவழ்தரு கண்ணனாய் -- வானத்
தவர்க்கும் அயர்க்கும் நினைகாலா வண்ணம்
உவந்திரு வாதவூர் சேறு.

துருவ வரதன் :
 
வலக்கைபூண்  ஆழி இடக்கைவெண்  சங்கம்
துலங்குமென் தாமரை கீழ்கையும் -- இலக
அருள்கை வலக்கை கதையும் திகழல் 
துருவன்முன் தோன்றினார்ப் போன்று.

புருஷோத்தமன்:

ஆண்ஒக்கும் எல்லா உயிர்க்கும் உயிர்த்தரலான் !
தாயொக்கும் பூதவுடல்  மாட்டுயிர்  -- பூண்செய்வான்!
மாணியாது மேல்நிற்பான்! அவ்விரண்டு மல்லன்காண்!
பேணல் பிரமம் அவன்!

காண்பவை கற்பவை கேட்பவை மாட்டுயர்
மண்ணவர் விண்ணவர் மூவரில் -- எண்ணல்ப்
படவுள நாரணன் அன்றி இலையே
கடவுளில் எல்லாம் தலை!

அபினிவேசமாகிற  மால்கிடக்கை.

உள்ளத்தே மால்உறைய இவ்உடலம் கோயிலப்பா!
பள்ளத்தே பாயும்நீர் அன்னமால் -- வெள்ளம்
மனத்தடங் காவாய் புரளநாப் பேசும்
அனைத்துமே பாசுரமாய் மிக்கு!

ஆழ்வார் வரதன் :

கரிகிரியான்! கார்வானம் போல்கருணை சோரும் 
விரிகுழல் வட்டத் திருவிழியான்! -- வாரிநீர்
ஏரிஎன ஆழ்வார் மனத்துசேரல் துற்றில்
தரிசல் விளைபக்தி நாற்று!

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி :

வைய்ய மனிசர்தம் வாழ்வு சிறக்கவே
செய்தவேள்வி யாதுஎனில்  ஐயநின் -- துய்யதிருப்
பாதம் பிடித்து இராமா நுசாஎன
ஓதுமொரு நாமம் அது.

ஓணம் : 

மாவலியை ஓர்காலால் கீழுலகுக் கோட்டிமறு 
தாவில் உலகம்மேல் ஏழவையும்  -- மேவி 
இருக்கை திசைகள் எட்டும் புறத்தே
பெருகுமால் ஓணத்தான் ஓம்பு!

கடவுள் :

பூதம் ஒருஐந்தும் நன்றிதன் மூலமாய்
போதமோர் ஐந்தின் கருவியால் -- ஓதி
உணர்தல் உடல்மிசை மேவும் உயிரே!
புணர்தலவை செய்வான் இறை!


141. விதிமீறல் இவ்உலகோர் ஓவும் உகந்து!
அதுசெய்தார் மாற்றல் முறையோ? -- துதிசெய்து
தேவர்க் கிரப்பக் கொடுப்பார்! அவர்க்குடைத்
தேவன் திருமால் கரந்து !


பாதரேணு :

கடலோசைக்  கட்டியமோ? காற்றதூம் காலாய்
மிடற்றோசை விண்ணவர்க்குப் பண்ணோ? -- ஆடும்
அலைநீர் உவர்கால் வருடவப் பொன்னித்
தலைவன் உகக்குமும்கால் பட்டு!


கோதா ஸ்துதி :

போற்றியென ஏற்றும் பெரியாழ்வார் முற்றத்துப்
பொற்கொடியே! பொன்னரங்கன் தாள்பற்றி-- நிற்ற
தவவடிவே! கோதா! திருமால் பெருமாட்டி
மேவாக் கருணைநீ கூட்டு!


ஆராவமுதாழ்வான் :

அனைத்துலகு மாளும் அரவிந்த லோசனனை  !
ஆனை பரிதேரில் ஏறுபெரு -- மானை!
நினைப்பகலா உத்தான சாயிக் கிடம்,பாம்
அணைசேர் திருக்குடந்தை யே !

அரங்கமேயவப்பன் :

 பாற்கடல் பாம்பணை பள்ளிகொள் காவிரி
மேற்படி கண்ணன் இராமனென -- போற்றல்
பெருமானார் முன்பினென நம்பெருமாள் என்றும்
பெரிய பெருமாளாம் இங்கு!

 ஸ்ரீ ஸ்ரீநிவாஸ கல்யாணம் :

பிருகு உதைத்தான் எனச்சினந்து மாலின்
பிரிந்த திருவும் தவக்கோலம் -- நேரலும்
தேடித் திரிந்த திருமால் கடிதினவள்
நாடிப் புணர்தான் மணம் !


மலையப்பன்  கருட வாகனம் :
 
வானின்று வேங்கடம் வந்தாய்! வருவேன்
இனியென்று கோயிலில் நின்றாய்! -- குனியேன்யான்
என்றிருந்த என்மனத்து  மன்றில் கலுழன்மேல்
நின்றிருப்பக் கண்டேன் உனை! 


உடையவர் திருமடம் , காஞ்சி.
 
மடமே திருஉடம்பு! மாடம் திருமார்பு!
தோடுடைத் தூண்கள் அவையும் -- திடமான
வாயில் புஜங்கள் எனவாய் கலசம்சேர்
கோயில் உடையவர்தம் வீடு.

முத்தங்கி பார்த்தசாரதி :

முத்தப்பன் என்னப்பன் தான்இவரே! என்நெஞ்சுள்

தித்திப்பான்! எத்தனையும் ஒத்திலான் -- அத்தனையோ?

நித்தமவன் என்சித்தம் வைத்து விலகாது

வந்திக்கும் முற்றத் திளைத்து!



150. விஷ்ணு போதம் :


நம்பெருமாள்! நம்எல்லோர்க் காம்பெருமாள் தம்தேவி   

செம்பொற் பதமாம்தெப் பக்கையால்  -- அம்புயைக்கோன் 

பாத யுகமாம் பெரும்பதத் தீரம்சேர் 

போதம் அணைவதெப் போது?

ஸ்வாபதேசம் :

நம்பெருமாள் - "ந்த்யஜேயம் கதாசந" என்று சரணாகத ப்ரதீக்க்ஷனாய் நின்ற பெருமாள், உற்சவ பேரர் ராமர்.

நம்எல்லோர்க்காம் பெருமாள் - ஸம்சாரம் கிழங்கெடுத்தால் அல்லது பெயறேன் என்று திருவரங்கம் திருப்பதியே நித்ய வாசமாய் ஸயநித்த பெருமாள், மூலவர் கண்ணனெம் பெருமான்.

இருவரையும் எடுத்தது , பிரபத்திக்கு வகுத்தவிடம் அர்ச்சாவதாரமாகையாலும், இதற்கு சௌகர்ய ஆபாதக குணயுக்தராய் ஸ்வாமித்வம் தோற்ற திருமுடியைக் காண்பித்தபடி இருக்கிற பெரியபெருமாள், ஸ்வாமித்வம் கண்டு விலகாமைக்கு அஞ்சல் என்று வைத்த அபயஹஸ்தமும், கண்டு பற்றுகைக்கு ஆதரமாகக் காட்டிய திருவடியுமாய் நிற்கிற நம்பெருமாள், இருவரும் உத்தேஸ்மாகையாலே.

தேவிதம் செம்பொற்பதமாம் தெப்பக்கையால் - " ஶ்ரீமந் நாராயண சரணௌ " என்கிறபடியே ஆஸ்ரயிக்கும் போது புருஷகார பூதையான பிராட்டி ஸந்நிதி அவஸ்யமாகையாலே , சரண்யனுடைய மகிஷியாய், நீறுலே நெருப்பு கிளறுமாபோலே, பிரபத்தி கார்யகரமாகத் தடையாக உள்ள பகவந்நிக்ரஹகத்தை க்ஷமிப்பிப்பவளாயும் உள்ள ஶ்ரீரங்கநாச்சியார் திருவடித்தாமரைகளை, ஓடக்காரன் கையில் துடுப்புக் கட்டை போலே அத்யவஸித்து

அம்புயைக்கோன் பாத யுகமாம் பெரும்பதத் தீரம்சேர் போதம் - அவ்விருவரான சேர்த்தியிலே " தைலதாராவது அவிச்சிந்ன ஸ்மிருதி ஸந்தாந " மாகிற கைங்கர்ய அபேக்ஷயாகிற பலவியாப்திக்கு உகந்த நிலம், பிராப்யபூமி, பரமபதமாகையாலே அத்தை பிராபிக்கிற , 



போதம்- அந்த ஶ்ரீரங்கநாச்சியாருடைய வல்லபனாய், ஸாலோக, ஸாமீப்ய, ஸாயுஜ்யம் அருளுகிற நீட்டின திருவடியுடனாய் இருக்கிற பெரியபெருமாள் அவரே,  ஓடம் போலே  உபாயமாகக் கடவது. .

போதம் அணைவதெப் போது - "அக்கரை என்னும் அனர்தக் கடலுள் அழுந்தி, உன்திருவருளாம் இக்கரை ஏறி இளைத்திருப்பேன்" (பெரியாழவார் 4-3-7) என்கிறபடியே   " விஷ்ணு போதம்"  ஆகிற தோணிபெற, ஸாலோக, ஸாமீப்ய, ஸாயுஜ்யமாகிற இக்கரை ஏறி அயர்வு ஆறி இருப்பது எப்போது? என்று "கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?" எனவாய் இவர் அங்கலாயம் இருப்பது. 



த்வய பூர்வ கண்டார்த்தத்தை உள்ளடக்கிய இப்பாடலில் சொல்ல வந்த அந்யாபதேசமாவது : 



சரண்யனான எம்பெருமான், ஆஸ்ரயண வேளையில்  முமுட்சுவான சேதநனையும், பிராட்டி புருஷகார ஸாகாரத்தையும்  அபேட்சித்து இருந்தாலும் 
பல வேளையில் இருவருடைய நிரபேக்ஷமாய் கார்யம் செய்யும் என்பது தென்னாசார்ய ஸம்பிரதாயம்.
அதற்கேற்ப பிராட்டியைத் தெப்பக் கையாகவும், எம்பெருமான் திருவடிகளை தெப்பமாகவும் (ஓடமாகவும்) சொன்னது, தோணி இல்லாது தெப்பக்கை நீந்துவிக்காது ஆகையாலே, செலுத்துகிற துடுப்பாய் இருக்கிற பிராட்டியை  புருஷகாரமளவாக சொல்லலாமே ஒழிய உபாயமாக்க விழி இல்லை.

தோணி அக்கறை சேர ஓடம், துடுப்பு இரண்டும் வேண்டி இருக்க, ஓடமாய் உள்ள திருவடிகள் , துடுப்பாய் உள்ள பிராட்டி சேர, இருவரும் உபாய மாகாதது எங்கனே என்னில், ''சரணௌ சரணம் பிரபத்யே" என்ற விடத்து சரணௌ = திருவடிகளை , சரணம் = உபாயமாக , பிரபத்யே = பற்றுகிறேன் என்பதற்கு இணங்க எம்பெருமான் ஒருவனே ஓடமாய் உபாயமாகிறான், துடுப்பைக் கொண்டு செலுத்துமவன் அவன் ஆகையாலே. எப்படி ''சரணௌ'' என்பது பகுவசனமல்லாது (பன்மை), த்விவசனமாய் (இருமை) இரண்டு திருவடிகளை மட்டுமே குறிப்பதாய் அமைந்ததோ, அத்தால் நாராயணன் ஒருவனே உபாயம், பிராட்டிக்கு உபாயத்வமில்லை. புருஷகாரத்துவமே பலித்ததாகிறது அல்லவா? இருவரும் உபாயமாக வேண்டில், ''சரணாம்'' என்கிற பக்குவசன மாகவன்றோ துவயத்தில் அனுசந்தானம் இருக்க அமையும். அங்கணம் காண்கற் றிலையே !
எம்பெருமானால் அன்றி துடுப்பு தானாக தோணியைச் செலுத்தாதாகையாலே, பிராட்டிக்கு உபாயத்வத்தில் ஔசித்யமில்லை. 

அதுபோக, பிராட்டி திருவடிகளை  மார்தவ , ஸ்பிரிணீஹத்வாத் யதிசயங்ககளுக்குச் சான்றாக ''செம்பொற்பதம்'' என்று ஸாத்ருஸ்யம் தோற்றக் காட்டினது, ஆஸ்ருந்தார்கள் அத்தைப் பற்ற இழிகைக்காக. அதேவிடத்து , சரண்யனுடைய உபமான ரஹிதமான திருவடிகளை ''பாதயுக்மம்'' என்று வெறுமனே ஒப்புமை இன்றிச் சொன்னது , இவைகளுக்கு ஒக்க உதாகரிக்க இன்னொரு வாஸ்து இல்லை என்ற அளவே அல்லாது , புருஷகார பிரியுக்தமான பிராட்டி திருவடிகளும் , உபாய பிரயுக்தமான இவன் திருவடிகளுக்கு சதுர்ச மாகமாட்டாது என்பதை விசேஷித்துக் காட்டவே . ''தது தஸ்ய சதுர்ஸம் பவேத்'' என்னா நின்றனரே.

151. பிணைகொடிலும் போகவொட்டா வானவர் நாடு
அணையுநாள் ஆங்கவ் விருவர் -- இணையடிக்கே
ஆன அடிமைக்கண் ஆளாக்கி தாம்மகிழ்தல்
காணவடி யார்தாள் அடி!

ஸ்வாபதேஸம் :பிணைகொடிலும் போகவொட்டா வானவர் நாடு : 
 ''நச புநராவர்த்ததே! நச புநராவர்த்ததே! " என்கிறபடி மீளாப் பெருநகரமான பரமபதம், ''தூமணி'' என்கிறபடி, ஸம்ஸார அஸம்ஸ்ப்ருஷ்டராய் பகவத் விஸ்லேஷ ரஹிதராய் இருக்கிற நித்யாத்மக்களும் , ''துவளில் மாமணி'' என்கிறபடி பகவத் கிருபா  பகுமானிதராய், ஸம்ஸாரம் களையப் பெற்று ஸாலோக, ஸாமீப்ய , ஸாயுஜ்ய ஸன்மானிதராய் இருக்கிற முக்தாத்மாக்களும் , பரஸ்பர நீசபாவத்தோடே வர்த்திக்கிற தேசம் வானவர் நாடு. 

"ஆதியம் சோதிவுருவை அங்குவைத் திங்குப்பிறந்த"  என்கிறபடி சூரி போகமான தன்னுடைய பரத்வ, சேஷித்வாதிகளை அவர்களுக்கு பணயம் வைத்து, "இச்சா க்ருஹீத அபிமத  தேஹம்" என ஆஸ்ருத பாரதந்தரியம், சௌலப்யம், நீர்ம்மை உருக்கொண்டு , ஸம்சாரிகள் இழவுதீர இங்கு வந்து பிறத்தல் அவனுக்கப்போல், "புண்ய பாபே விதூய" என்று அவை கழிந்து இங்கினின்றும் அங்கு சென்ற இவர்களுக்கு அது ஒண்ணாதிறே.

அணையுநாள் : ஏவம் வித நித்ய விபூதி பிராப்தமான வளவிலே

ஆங்கு : புருஷார்த்த பராகாஷ்டைக்கு உகந்தும் , அதில் ஆழங்கால் படுகையினின்றும் கைவாங்க வேண்டாதபடி தேஹாத்ம விரோதிகள் அற்ற தேசம் ஆகையாலே , ஆங்கு என்று சம்சாரத்தை வியாவர்த்திக்கிறது.

அவ்விருவர் இணையடிக்கே :பலநாள் நோயில் விழுந்த குழந்தையை கண்ணிலிட்டு நோக்குவாராய்ப் போலே, ஸ்வரூபாநுரூப கைங்கர்யத்தில் இட்டு தரிப்பிலே மூட்ட விழைகிற மாதா, பிதா போலே இருக்கிற இருவர் , கைங்கர்ய பிரதி  ஸமந்தியாய் , சேஷியாயும் இருக்கிற ''ஸ்ரீ மன் நாராயண" னாத   இருவர் சேர்த்தியிலே

இணையடிக்கே ஆன அடிமைக்கண் ஆளாக்கி : தம் உகப்புக்கான அடிமைக்கு விஷயமாக்கி ''அஹம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்து, அடியான்" என்று வியாபதேஷ்டிதனாய் தமக்காக்கி

தாம் மகிழ்தல்    : ''ஆத்ம லாபம் ஈஸ்வரனுக்கே '' என்று  பிராப்தாவும் பிராப்திக்கு உகப்பானும் அவராய் , தன் இஷ்ட விநியோகமாக்கி

காண : அங்கனே அவர்கள் முகமலர்த்தி கண்டு தாம் மகிழ்தலாகிற பரார்த்த கைங்கர்ய பூயிஷ்டராய் நிலைய

அடியார்தாள் அடி : '' தத் சேஷத்வம் ததீயா சேஷத்வமளவாக சென்றல்லது நில்லாது '' என்பதற்குச் சேர பகவத் ருசி பரிக்ருஹீதமான பாகவத கைங்கர்யமும் , பாகவதர்களுக் குள்ளே அந்தர் பூதரான ஆச்சார்ய ருசி பரி க்ருஹீதமான பகவத் சேஷ வ்ருத்திக்கு அடி பாகவாதானுவ்ருத்தியே என்று தம்முடைய அவாந்தர பல சித்திக்கு ததீய சேஷத்வமும், ஆச்சாரிய நிஷ்டையுமே ஆகக் கடவது என்கிற அளவாக கிருபையை உபாயமாகி, ஸ்வ எத்னத்தை இதிலே கழிக்கிறார் .

அந்யாபதேஸம் :

த்வய உத்தர கண்டார்தத்தை பிரதிபதிக்கிறது இதில்.

''அத்ர பரத்ர சாபி :"  என்றும் , ''எங்கும் திருவருள்'' என்றும் இவ்விடத்திலேயுமாய் கைங்கர்யத்துக்கு அவகாஸம் உண்டாயிருக்க, பரம பதத்திலே ஆஸக்தி என் என்பதற்கு விடை காண்கிறார் முதலில்.

ஸம்ஸாரம் களை எடுத்தால் அன்றோ பிராப்ய ருசி சுதீர்கமாகக் கடவது. ''வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து " என்கிற ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீஸூக்திக்குச் சேர ஸம்ஸார நிவர்த்தக பூர்வ பரமபத பிராப்தி இறே மோக்ஷம். அத்தை ஆஸாசிக்கிறது  பிரதமத்திலே.

பிராப்த பூமி சம்பவித்த அளவிலே வகுத்த சேஷியாய் , பிராப்தாவானும், ஸர்வ சேஷியுமாய் இருக்கிற அவனும், ''விஷ்ணுப் பிரதம கிங்கரி '' என்று  தலை மடையிலே  சேஷிணியான  அவளுடைய   சேர்த்தியிலே செய்வதாகிற கைங்கர்யத்தாலே  பிரசன்னர்கள் ஆக்குகை. உத்தேஸ்யம்.

''கண்முகப்பே கூவிப் பணிகொள்ளல்'' ஆகிற இஷ்டவிநியோகம் பலம். ''அன்நாதன் ''அவனாக, ''அன்னம்'' தாமாக, கைங்கரியத்தில் களையாகிற ''ஸ்வார்த்த'' கைங்கர்யானுபூதி  நீங்கப் பெறுகை  அசாதாரண பலம்.

இத்தனைக்கும் அடி பாகவத சம்பந்தமும், ஆச்சார்ய  அனுவர்த்தன மாகிற பஞ்சமோபாய நிஷ்ட்டை  என்று நிகமித்தாராகிறார்.

பிரதம பர்வர்களுக்கான த்வயம்

ஸ்ரீ மந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே
ஸ்ரீ மதே நாராயணாய நம:

சரம பர்வர்களுக்கான த்வயம்

ஸ்ரீ மந் ராமாநுஜ சரணௌ சரணம் பிரபத்யே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:

என்பதாகும்.

இங்கு மதுப்பால் உத்தாரக ஆசாரியரான இராமாநுஜருடனே ஸம்பந்திசித 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவராய், ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசிப்பவருமான உபகாரக ஆச்சாரியனோட்டை சம்பந்திகராய் இருக்கையும் . பஞ்ச ஸம்ஸ்கார முக்கேண ,ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண சரம பர்வர்களுக்கான த்வய அநுஸந்தானம் பிரபத்தி.

அவ்விருவருடைய முகமலர்த்திக்காக , '' தேவ பிரானுடைய கரியகோல திரு உருக்காண்பான் நான் , பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்காள் உரியனாய் '' என்கிற பாணியிலே பிரதமத்திலே ஆச்சார்ய ருசி பரி க்ருஹீதமான பகவத் ஸந்நிதியிலும் , தத் பராகாஷ்டாபிநி  வேஸத்தாலே  உபய ஆச்சார்யகள் பாக்கலிலேயும் பிரவணராய் பல சந்தியஷ்டராய் ''திருவேங்கட யாத்திரை போவதே பிரயோஜனம் போலே, கைங்கர்யமாவதே பிரயோஜனமாய் ''அளியன்  நம்பையல் '' என்றும் ''ஸாது கோஷ்டியுட் கொள்ளப் படுவரே '' என்கிற ரீதியிலே பிராப்திபலம்.

கேட்பது அவனை. ஆட்படுவது இன்னொருவருக்கு? என்பதாய் , உபாய -உபேய ஐக்யமத்வம் இல்லையே என்னப் போகாது , ஆச்சரியனை - உபாய பூதனான எம்பெருமான் - திருவடியாகவே அந்வயித்தபோது.

இதையே

ஆளாக்கி = அத்தலைக்கு அதிசயத்தை உண்டு பண்ணி
மகிழதல் காண்கை = அவ்விருவருடைய மகிழ்தலை தாம் காண்கைக்கு  ,

அடியார் தாள் அடி = என்று உபாயம் ஆச்சாரியனாய், உபசாரம் இருவருக்குமாய் இவர்கள் இருக்கும் படியை நிர்தேசிதது.
ஆக ''சரணௌ சரணம்'' என்ற விடத்து எம்பெருமானுடைய திருவடி நிலையரான ஆச்சாரியனை உபாயமாகப் பற்றி, அவருகந்த பகவத் பாகவத கைங்கர்யம் அபேக்ஷித்த மாகிறது உத்தர வாக்கியத்தாலே.

தாசாரதி தாஸன்,
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .